"இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிக்காக பாடுபடுவோம்" - ஈரோடு த.மா.கா. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

 
erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் என த.மா.கா. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு த.மா.கா ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த கூட்டத்தில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

GKvasan

தொடர்ந்து இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசும்போது, கடந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்று த.மா.கா ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டபோது, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் யுவராஜா தோல்வியடைந்தார். தற்போது துரதிஷ்டவசமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறையும் த.மா.கா, அதிமுகவுடன் கூட்டணியை வலுவாக அமைத்துள்ளது. தேர்தலில் வேட்பாளர்கள் குறித்து ஜி.கே.வாசனுடன், அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

கூட்டணி தர்மப்படி கடந்த முறை போன்று, இம்முறையும் அதிமுகவிடம் த.மா.கா.வுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்போம். மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெற பாடுபடுவோம், இல்லாவிட்டால் அதிமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம். 18 மாத கால திமுக ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே இடைத்தேர்தலில் அதிமுக - த.மா.கா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி, இவ்வாறு அவர்கள் கூறினார்.