"கோவையில் அக்.31-ல் பந்த் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"... பாஜகவுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்!

 
bjp

கோவையில் வரும் 31ஆம் தேதி பந்த் நடத்துவதை பா.ஜ.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து கோவையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், வரும் 31ஆம் பந்த் நடத்துவதை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்பின் கோவை மண்டல தலைவர் சூலுர் டி.ஆர்.சுந்தரேசன் விடுத்துள்ள அறிவிப்பில், பந்த் மற்றும கடையடைப்பு எந்த அமைப்பு அறிவித்தாலும் வணிக சங்க பேரமைப்பின் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து வணிகர் சங்கங்களின் ஒப்புதல் பெற்றே பந்த் மற்றும் கடையடைப்புக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி தலைவர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோவை சிபி ராதாகிருஷ்ணன் அக்டோபர் 31-ல்  வணிக பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது ஏற்படுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Image

மேலும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்புலத்தில் யார் இருந்தாலும் முறையாக விசாரணையை விரைவு படுத்தி  தெளிவு பெற்று குற்றவாளிகளுக்கு உச்சபச்ச தண்டனையை விரைந்து அளித்திட, காவல்துறை நடவடிக்கை எடுக்க தனது முழு ஒத்துழைப்பை அளித்திடவும் பேரமைப்பு வலியுறுத்துவதாக கூறி உள்ளார். கோவையில் சிவி ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள பந்த் அழைப்பினை மறு பரிசீலனை செய்திடவும், கோவை மாவட்ட வணிக சங்க நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவு எடுத்திடவும் பேரமைப்பின்  தலைவர் ஏ.கே.விக்ரமராஜா கேட்டுக்கொண்டுள்ளதாவும், அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தங்களது அறிவிப்புக்கு எதிராக வணிகர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படதா வண்ணம் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.