நீர்வரத்து வினாடிக்கு 16,891 கனஅடியாக அதிகரிப்பு... பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக உயர்வு!

 
bhavani sagar dam

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 16,891 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை அமைந்துள்ளது. 105 அடி மொத்த உயரம் கொண்ட இந்த அணை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி விருகிறது. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. 

bhavani sagar

மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை 102 அடி எட்டியதும், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும். இந்த  நிலையில் நீலகிரி மாவட்ட மலைப் பகுதியில் நேற்று பலத்த மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல், கேரளாவில் பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்தம் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் தற்போது 98 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. இதனால் பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீரும் பவானிசாகர் அணைக்கு தற்போது வருகிறது. 

bhavanisagar dam

இதனால் பவானிசாகர் அணைக்கு இன்று 8 மணி நிலவரப்படி  வினாடிக்கு 16,891 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக உள்ளது. அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 900  கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5 கனஅடியும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,005 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.