திருவாரூர் நகராட்சி பகுதியில் வார்டு சபா கூட்டம் - ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்பு!

 
wardsaba

திருவாரூர் நகராட்சி 9-வது வார்டில் நடைபெற்ற வார்டு சபா கூட்டத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்

முதலமைச்சர் உத்தரவின்படி நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை ஒட்டி திருவாரூர் நகராட்சி 9-வது வார்டில் நடைபெற்ற வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இதில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது, வார்டு சபா கூட்டமானது நகராட்சி வார்டுகளிலுள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வு காணுவதற்காகவே நடத்தப்படுகிறது. மேலும், நகராட்சி வார்டு பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்கள் மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள முதல்வர் உத்தரவின்படி இன்று வார்டு சபா கூட்டம் நடத்தப்படுகிறது. வார்டு சபா கூட்டமானது நகர்புற பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஆட்சியர் கூறினார்.

ward saba

தொடர்ந்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். வார்டு சபா கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன.