விநாயகர் சதுர்த்தி : திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைப்பு!

 
trichy pudding

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடையிலான ராட்சத கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் மற்றும் மலையின் உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது. 

trichy rockfort

விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியதை முன்னிட்டு, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையார் சன்னிதிகளில் தலா 75 கிலோ எடையில் செய்யப்பட்ட 2  பிரம்மாண்ட 150 கிலோ கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டது. இதனையொட்டி கோவில் அர்ச்சகர்கள் ராட்சத கொழுக் கட்டைகளை தோளில் சுமந்து சென்று மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையார் கோவில்களில் படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.