கோவை மலைவாழ் கிராமத்தில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் சமீரன் பங்கேற்பு!

 
grama saba

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் மே தினத்தினையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

cbe

அப்போது, அவர் கூறியதாவது, கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிகளின் 2021-22ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, நமக்கு நாமே திட்டம், 100 நாள் வேலை திட்டம், திடக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். கிராம சபை  கூட்டங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். 

cbe

இதனை தொடர்ந்து, மாவுதம்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட பகுதிகளில்  இறப்புச் சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்த உத்தரவிட்ட ஆட்சியர் சமீரன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், பள்ளி மாணவிகளிடம் சைல்டு லைன் எண் 1098 குறித்து, ஆட்சியர் சமீரன் விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்.