பெரம்பலூரில் துணிகரம்... உணவக ஊழியர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை!

 
robbery

பெரம்பலூரில் உணவக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று காலை குடும்பத்தினர் பெரம்பலூருக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.

perambalur

அப்போது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் நகை, ரூ.42 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் டவுன் காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.