ஊத்தங்கரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து; பெண் பலி, 15-க்கும் மேற்பட்டோர் காயம்!

 
uthangarai

ஊத்தங்கரை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மணமக்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சுண்ணலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமு(26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உஷா என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று காலை அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று காலை மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 20 பேர் சுற்றுலா வேன் மூலம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை ராமுவின் உறவினரான சரவணன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

uthangarai

ஊத்தங்கரை அடுத்த ஒன்னக்கரை காப்புக்காடு என்ற இடத்தின் அருகே சென்றபோது சுற்றுலா வேனை, டாரஸ் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உஷாவின் உறவினரான மல்லிப்பட்டியை சேர்ந்த சுதாகர் மனைவி சாந்தி என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மணமகன் ராமு, மணமகள் உஷா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விபத்தில் பலியான சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.