பெரம்பலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதல்; 2 பெண்கள் பலி, 6 பேர் படுகாயம்!

 
perambalur

பெரம்பலூர் அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் மேலூரை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், வேன் ஓட்டுநர் உள்பட 6 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்றிரவு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். வேனை மதுரை மாவட்டம் கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் (63) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது.

perambalur gh

அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது, வேன் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் மேலூர் மட்டங்கிபட்டியை சேர்ந்த ஞானசேகர் மனைவி (50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

அங்கு மட்டங்கிபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி கோமதி (40) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, விபத்தில் பலியான இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.