வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் 7ஆம் திருநாள்: ரத்தின நீள்முடி கிரீடத்தில் காட்சியளித்த நம்பெருமாள்!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகதசி விழா பகல் பத்து உற்சவத்தின் 7ஆம் நாளான இன்று நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடத்தில் எழுந்தருளினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவம் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, பகல் பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளிலும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.

srirangam

இந்த நிலையில், பகல் பத்து உற்சவத்தின் 7ஆம் நாளான இன்று நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து நீள்முடி கிரீடம், மகர கர்ண பத்ரம், மகரி, பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் மிக அரிதான இந்திரக்கல் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், ரத்தின அபயஹஸ்தத்துடன் வெண்பட்டு கச்சத்தின் மேல் தர்பார் அங்கி அணிந்து, நெல்லிக்காய் பொட்டு மாலை, இரட்டை வட பெரிய முத்துச்சரம் சாற்றி, பின் சேவையாக - சந்திரகலை பதக்கம், புஜகீர்த்தி, தாயத்து தொங்கல் ஆகிய ஆபரணங்கள் அணிந்து, பன்னிரு ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 

இத்திருக்காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான வரும் ஜனவரி 1ஆம் தேதி அன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.