கொடைக்கானலில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

 
Bribe

கொடைக்கானல் அடுத்த மன்னவனூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனது தாயார் பெயரில் இருந்த நிலத்தை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி, மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, அவர் பட்டா மாறுதல் செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத ராஜகோபால், இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை நேற்று ராஜகோபால், கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதனிடம் வழங்கினார்.

bribe

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார், விஏஓ சுவாமிநாதனை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் பெற்ற புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.