"பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9%ஆக குறைக்க வேண்டும்"... ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு!

 
erode

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9% ஆக குறைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2-வது செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. நசியனூர் சாலையில் உள்ள சங்க கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.கே.பாலுசாமி பங்கேற்றுப் பேசினார். இந்த கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
Erode traders

இந்த கூட்டத்தில், அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என்றும், தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12% வட்டியை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்போது, ஜி.எஸ்.டி. செலுத்தும்போது சலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் ஒப்பமிட வேண்டும் என வங்கிகள் கூறுவதாகவும், இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதால், முகவர்கள் ஒப்பமிட்டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவநேசன், ஜெகதீசன், தேவராஜா, முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கெளரவிக்கப்பட்டனர். இதில் இணைச் செயலாளர் பழனிசாமி, கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.