உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் பலி!

 
accident

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணியூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (32). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பரான செல்லபாண்டியன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.  உடுமலை - பழனி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கதிரேசன் இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே உடுமலையில் இருந்து பழனி நோக்கி சென்ற பாலச்சந்திரன் (32) என்பவரது இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

udumalai

இதில் கதிரேசன், அவரது நண்பர் செல்லபாண்டியன், மற்றொரு வாகனத்தில் வந்த பாலச்சந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் மடத்துக்குளம் போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.