சிதம்பரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: தனியார் நிறுவன மேலாளர் பலி!

 
accident

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (45). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நாள்தோறும் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை முத்துக்குமரன் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

chidambaram

இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்துக்குமரன் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மற்றொரு வாகனத்தை ஓட்டிவந்த கல்லூரி மாணவர் ஹரீஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சிதம்பரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.