தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது!

 
tuti

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு சர்வீஸ்க்கு வந்த இருசக்கர வாகனம் ஒன்று கடந்த 22ஆம் தேதி காணாமல் போயுள்ளது. அதேபோல், கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகர் தொம்மையார் காலனி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த, பிரையன்ட் நகரை சேர்ந்த பேச்சிமுத்து (38) என்பவரது இருசக்கர வாகனமும் திருட்டு போனது. இது குறித்து இருசக்கர வாகன ஷோரூமின் மேலாளர் தூத்துக்குடி புஷ்பா நகரை சேர்ந்த சின்னத்துரை (53) மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

arrest

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து, இருசக்கர வாகனத்தை திருடியவர்களை தேடி வந்தனர். கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி மேல ஆத்தூரை சேர்ந்த அஜித் (23) மற்றும் டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (23) ஆகியோர், 2 இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார், அஜித், செல்வராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  இதனிடையே இந்த வழக்கில் கைதான அஜித் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.