நெல்லை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட இருவர் பலி!

 
auto

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சாலை பணிக்காக மரத்தை அகற்றியபோது, ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் முதல் திருச்செந்துர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரம் அடுத்த பத்தமடை பகுதியில் இன்று காலை சாலையோரம் இருந்த மரங்களை, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலமரம் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்தது.

dead body

இதில் ஆட்டோ ஓட்டுநர் காதர், ஆட்டோவில் பயணித்த ரஹ்மத் என்ற பெண ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்தமடை போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜேசிபி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நெடுஞ்சாலைத்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் மரத்தை அகற்றியதால் இருவர் பலியானதாக கூறி, அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.