திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி!

 
accident

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டாஸ்மாக் பார் ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அடுத்த செம்பூரை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் சரவணன் (21). இவர் தென்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு சரவணன், சிராவயலை சேர்ந்த தனது நண்பரான ரகுநாத்(21) உடன் திருப்பத்தூர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரகுநாத் பலத்த காயமடைந்தார்.

sivagangai gh

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாத் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.