பட்டுக்கோட்டை அருகே கார் மோதி இருவர் பலி!

 
accident

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (65). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (63). கூலி தொழிலாளர்களான இருவரும், நேற்று கரம்பயம் கூட்டுறவு சங்கம் அருகே நண்பர்களுடன் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரம்பயம் கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த நடேசன், முத்துசாமி ஆகியோர் மீது மோதி விட்டு, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

pattukottai

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நடேசன், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், விபத்தில் பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.