ஓசூர் அருகே காரில் குட்கா கடத்திய இருவர் கைது... ரூ.95 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 
gutka

பெங்களுருவில் இருந்து ஒசூர் வழியாக காரில் கடத்திய ரூ.95 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய போலீசார் நேற்று பேரண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

gutka

இது தொடர்பாக காரில் இருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மொஹிதீன் ஜின்னா, முருகன் என்பதும், அவர்கள் பெங்களுருவில் இருந்து வள்ளியூருக்கு விற்பனைக்காக குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 2 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.