தஞ்சையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது: 8 பவுன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்!

 
tanjore

தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த 2 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 8.5 பவுன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்தும், அரசு மதுபான கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டும் வந்தது. இந்த கும்பலை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜெகபர் சித்திக் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் தலைமை காவலர் கவியரசன், காவலர்கள் ரமணி, விக்னேஷ், தினேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

tanjore

இந்த நிலையில் கொள்ளை கும்பலை சேர்ந்த திருவாடுதுறை குமார் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் ஆகியோர், ஆடுதுறை பேருந்து நிறுத்தம் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், இருசக்கர வாகனத்தில் நின்ற இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து,  அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8.5 தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கைதானவர்களிடம் கொள்ளை கும்பலை சேர்ந்த மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.