ஈரோட்டில் இருவேறு இடங்களில் கஞ்சா - குட்கா விற்ற 2 பேர் கைது!

 
arrest generic

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பங்களாபுதூர் பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலிசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பங்களாபுதூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் தனபால் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் இலூர்மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இளைஞரை போலிசார் விசாரிக்க முயன்றனர். அப்போது, தப்பியோட முயன்ற அந்த நபரை போலிசார் மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ்(32) என்பதும்,  விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, நாகராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

police

இதேபோல், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பழைய மார்க்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்த நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அந்த நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சத்தியமங்கலம் மேற்கு சந்து பகுதியை சேர்ந்த குணசேகரன் (69) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.