தூத்துக்குடியில் விற்பனைக்காக குட்கா, மதுபாட்டில்கள் பதுக்கிய இருவர் கைது!

 
gutka

தூத்துக்குடியில் விற்பனைக்காக குட்கா மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38 கிலோ குட்கா மற்றும் 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விற்பனைக்காக குட்கா மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மடத்தூர் புறவழிச் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 2 இளைஞர்களை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர்கள் மதுபாட்டில்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

liquor

அதில் அவர்கள் மடத்தூர் பகுதியை சேர்ந்த செல்வம்(48), துரைராஜ்(43) என்பதும், இவர்கள் மீது குட்கா விற்பனை தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த சிப்காட் போலீசார், அவர்களிடம் இருந்து 38 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களையும், 84 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.