கோவை அருகே லாரி தீ பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி!

 
cbe

கோவை அருகே சாலைப்பணிக்கு தார் கலவை ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள குமரபுரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காரமடை பகுதியில் தார் கலவை தயார் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சாலைப் பணி நடைபெறும் குமரபுரம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கரூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆறுமுகம்(32) என்பவர் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை ஆறுமுகம், வழக்கம்போல் காரமடையில் இருந்து தார் கலவையை ஏற்றிக் கொண்டு குமரபுரத்திற்கு சென்றுள்ளார்.

dead

தொடர்ந்து, லாரியில் இருந்த தார் கலவையை சாலையில் கொட்டுவதற்காக ஹைட்ராலிக்கை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி மின்கம்பியில் உரசி உள்ளது. இதில் லாரி தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் லிவர் கம்பியை பிடித்து கீழே இறங்க முயன்றார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.