திருப்பத்தூர் அருகே திருநங்கை மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

திருப்பத்தூர் அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற திருநங்கை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் சந்துரு (19). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறிய நிலையில், தனது பெயரை சந்திரிகா என மாற்றிக் கொண்டார். இவர் திருநங்கையாக மாறியது, உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்ற சந்திரிகா, அங்குள்ள தனது உறவினர் முனீஸ்வரி என்பவரது வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

tirupattur gh

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திரிகா திடீரென மாயமாகினார். இதனால் அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று குரிசிலாபட்டு பகுதியில் சந்திரிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில், குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, உடல் கிடந்த இடத்தில் பூச்சி மருத்து பாட்டில் இருந்ததால் அவர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சந்திரிகாவின் உடலை, திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு அவரது இறப்புக்கு உறவினர்கள் தான் காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.