திருச்செங்கோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி... விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது சோகம்!

 
tiruchengode

திருச்செங்கோடு அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆனைமலை கரடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் முத்துவேல் (18). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமலை கரடு பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை நேற்று ஆற்றில் கரைப்பதற்காக கிராமத்தினருடன் முத்துவேல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். காட்டு வேலம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் சிலையை கரைத்தபோது, எதிர்பாராத விதமாக முத்துவேல் தண்ணீரில் மூழ்கினார். ஆற்றில் இறங்கிய முத்துவேலை காணாததால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், இதுகுறித்து உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

tiruchengode

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதி மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முத்துவேல் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, மொளசி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முத்துவேலின் தந்தை கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.