சீட்டு விளையாட்டின்போது விபரீதம்... தொழிலாளியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற இளைஞர்!

 
murder

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே சீட்டு விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை, கடப்பாரையால் அடித்துக்கொன்ற சக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் - அத்தாணி சாலையில் சாலை விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக, சாலையோரத்தில்  கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கவுண்டபாளையம் பகுதியில்  தகர கொட்டகை அமைத்து தங்கி உள்ளனர்.  இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பணிமுடிந்து கூடாரத்துக்கு திரும்பிய தொழிலாளர்கள் சீட்டு விளையாடி உள்ளனர். அப்போது, குமரி மாவட்டத்தை சேர்ந்த சுஜின்(40) மற்றும் ரமேஷ்(32) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

erode

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து சுஜினை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி போலீசார், கொலையான சுஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.