தாளவாடி பீரேஸ்வரர் கோவிலில் பாரம்பரிய சாணியடி திருவிழா... சாணி உருண்டைகளை வீசி விளையாடிய இரு மாநில பக்தர்கள்!

 
saniyadi festival

ஈரோடு மாவட்டம் தாளவாடி குமிட்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் நடந்த பாரம்பரிய சாணியடி திருவிழாவில் தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் சாணியை எரிந்து கொண்டாடினர். 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த குமிட்டாபுரத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் மூன்றாவது நாளில் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். பருவ மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், கிராம மக்கள் நோயிலிருந்து காக்கவும்,  கால்நடைகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் பாரம்பரியாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி விளையாடுவர்.

saniyadi festival

இதன்படி நேற்று குமிட்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் சாணியடி திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது. இதனையொட்டி, கிராம மக்கள் கோவில் குளத்தில் பீரேஸ்வரர் உற்வருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கழுதை மீது ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர்கள் மூலம் கோவில் வளாகத்தில் கொண்டு வரப்பட்ட மாட்டு சாணத்திற்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் மேலாடை அணியாமல் ஒருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி மகிழ்ச்சி பொங்க விளையாடினர். இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து, இந்த சாணிகளை பொதுமக்கள் சேகரித்து, தங்களது விளை நிலங்களுக்கு உரமாக இட்டனர். இதனால் பயிர்கள் செழித்து வளரும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.