ஆடிப்பெருக்கையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் - தருமபுரி ஆட்சியர் அறிவுறுத்தல்!

 
dharmapuri

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 1.10 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும், தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச்செல்லவோ மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி விதிக்கப்பட்ட தடை தொடந்து இருந்து வருவதாலும், நாளை (இன்று) ஆடி 18ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என்பதால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு வருகை தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

hogenakkal

மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ஊட்டமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி கரையோரங்கள், ஒகேனக்கல் சுற்றுலா தலங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது, மீன் பிடிப்பது, கரையோரங்களில் நின்று செல்பி, புகைப்படங்கள் எடுப்பது போன்ற எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு மீறுபவர்கள் மீது காவல் துறை  மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதை முன்னிட்டு, வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கும் அறிவுறுத்துவதோடு,  துறை அலுவலர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.