திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.34 கோடி வசூல்!

 
tiruvannamalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலாகி உள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சிவ பெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்களையும், உண்டியலில் காணிக்கை செலுத்துவம் வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

tiruvannamalai

அதன்படி ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் பக்தர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 174 கிராம் தங்கம் மற்றும் 852 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.