பழனியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது - 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
bike theft

பழனி நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பழனி டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், பழனி உட்கோட்ட டிஎஸ்பி சிவசக்தி மேற்பார்வையில், பழனி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் உதயக்குமார் தலைமையில், குற்ற தடுப்புபிரிவு போலீசார் பழனி நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

palani town

அதில், இருசக்கர வாகன திருட்டில் 3 நபர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (26), சேலத்தை சேர்ந்த பிரகாஷ் (32) மற்றும்  வினோத் குமார் (27) என்பது தெரியவந்த. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.