காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவதாக மிரட்டல்... ஜாமினில் வந்த அண்ணன், தம்பி கைது!

 
arrest

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன். இவரது மகன்கள் வீரமணி (23), அன்புமணி(20). இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளரின் மகனிடம் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் இருந்து வந்தனர்.


சமீபத்தில் இருவரும் பிணையில் வெளிவந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, வீரமணி, அன்புமணி ஆகியோர் மீது அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தங்கள் மீது புகார் அளித்த செந்தில் நகர் குடியிருப்பு சங்க நிர்வாகி திரவியம் என்பவரை கொலை செய்வதாகவும், காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டல் விடுத்து  வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பல்லடம் போலீசார் வீரமணி, அன்புமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைதான இருவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவை, திருப்பூர் மாவட்ட எஸ்பி சசாங் சாய் தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.