திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 300 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் நேதாஜி. இவர் தேவேந்திரன் உள்ளிட்ட 3 தம்பிகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தேவேந்திரனின் 2-வது மகன் பாலாஜிக்கு திருமண நிச்சயதார்த்த விழா நேற்று திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனையொட்டி, நேதாஜி குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்துவிட்டனர். இதனை அறிந்த மர்மநபர்கள்,  நேதாஜியின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த சென்சார் கதவுகளை உடைத்து வீட்டில் வைத்திருந்த 300 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

police

வீட்டில் சென்சார் லைட் எரிவது, நேதாஜியின் மகள் செல்போனுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் அருகில் உள்ளவர்களை சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி உறவினர்கள் சென்று பார்த்த்போது வீட்டின் சென்சார் பூட்டு உடைக்கப்பட்டு 300 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளர் சந்திரமோன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.  தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.