ஆதியன் பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிய திருவாரூர் ஆட்சியர்... நீண்ட கால கோரிக்கையை ஏற்று நடவடிக்கை!

 
tvr

திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இந்து ஆதியன் பழங்குயினருக்கு சாதிச் சான்றிதழ்களை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதகளில் இருந்தும் வந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இன்றைய முகாமில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 222 மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். 

tvr

இதனை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த இந்து ஆதியன் பிரிவை சேர்ந்தவர்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் 11 நபர்களுக்கு சாதிச் சான்றிதழும், சத்துணவு துறையில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 நபருக்கு இலவச பேருந்து அட்டையையும், ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.