திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.33 கோடி வசூல்!

 
tvmalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 33 லட்சம் ரொக்கம், கால் கிலோ தங்கம் உள்ளிட்டவை வசூலானது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில், சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது.  இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்து செல்வர். குறிப்பாக, பௌர்ணமி கிரிவலத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் அவ்வப்போது எண்ணப்பட்டு வருகிறது.

tvmalai

அதன்படி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கையை எண்ணினர். முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 31 ரொக்கம் வசூலானது. மேலும், 290 கிராம் தங்கம் மற்றும் 919 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.