பாம்பு கடித்த அரசுப்பள்ளி மாணவருக்கு சிகிச்சைக்கு உதவிய தேனி ஆட்சியர்!

 
theni

தேனியில் பாம்பு கடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவருக்கு, ஆட்சியர் நேரடியாக சென்று சிகிச்சை அளிக்க உதவிய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. 

தேனியில் பங்களாமேடு அருகில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் விக்னேஷ்வரன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முடி திருத்தம் செய்துவிட்டு, விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனை அடுத்து, அவரை உடனிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் மாணவருக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.

theni collector

அதன்படி மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்த நிலையில், நேற்று காலை மாணவர் விக்னேஷ்வரன், பாம்பு கடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்போது, ஆட்சியர் முரளிதரன், மாணவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், முழு உடல்நலன் பெற்ற பின்பு விடுதிக்கு செல்லலாம் எனவும், அவருக்கு தேவையான எந்த உதவியையும் ஆட்சியராகிய தானும், அரசும் செய்து தர தயாராக உள்ளதாக மாணவருக்கு ஊக்கமளித்தார். ஆட்சியரின் நடவடிக்கை காரணமாக மாணவர் விக்னேஷ்வரன் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட விடுதி மாணவருக்கு தக்க சமயத்தில் உதவிய ஆட்சியரின் மனித நேயமிக்க இந்த செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.