திருச்சி அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை - போலீசார் விசாரணை!

 
trichy

திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று 4 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வேலாயுதம் மனைவி ராதா(70). ஓய்வுபெற்ற செவிலியர். இவரது மகன் ரஜினி (42). இவர், திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவரது மனைவி, பிரசவதற்காக  ராஜபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி, மனைவியை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ராதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

murder

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ரஜினி, தனது தாயார் ராதாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரஜினி, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்து போய் பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்படி, பக்கத்து வீட்டினர் சென்று கதவை தட்டியபோது, ராதா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனை அடுத்து, ரஜினி முத்தரசநல்லூருக்கு வந்து, மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, ராதா வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி, இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து,  ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.