கடையின் முன் நிறுத்திய பைக்கை திருடிச்சென்ற இளைஞர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடையின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை செயல்பட்டு வருகிறது. புத்தாண்டை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் விஜயன், கடையின் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். மாலையில் சென்று பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.

palladam

அப்போது, பிற்பகல் 2.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், அக்கம் பக்கத்தில் நோட்டம் விட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து விஜயன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.