சேத்துப்பட்டு அருகே குடிநீர் இணைப்பில் குளறுபடி என வீடியோ வெளியிட்ட இளைஞர்... போலீசில் புகார் அளித்த அதிகாரிகள்!

 
chetpet

சேத்துப்பட்டு அருகே குடிநீர் இணைப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இந்திரவனம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக் முன் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 100 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று, திட்ட செலவு குறித்து ஒப்பந்ததாரர் அறிவிப்பு பலகையும் வைத்து இருந்தார்.

police

இந்த நிலையில், இந்திரவனம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், குடிநீர் குழாய்களுக்கு முறையாக இணைப்பு வழங்காமல் வெறுமனே குழாய் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் திட்டத்திற்கு பல லட்சம் செலவிட்டதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளதாகவும் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இந்திரவனம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனைத்து வீடுகளுக்கும் விரைவாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதனிடையே, குடிநீர் இணைப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதுறாக கருத்து பதிவிட்டதாக சம்பந்தப்பட்ட இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.