ஓட்டுநரின் இருக்கை அருகே ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்த பெண்... கோவையில் பரபரப்பு!

 
cbe

கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் தனியார் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஓட்டுநரின் இருக்கை அருகே பெண் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை காந்திபுரத்தில் இருந்து ஆனைகட்டி செல்லும் பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண் பயணி ஒருவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்வது தெரியவந்தது. இதனை பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த காட்சி வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய பொதுமக்கள், ஆனைக்கட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் வளைவுகளில் பேருந்து செல்லும்போது இவ்வாறு ஆஜாக்கிரதையாக பயணிப்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளனர்.

cbe

மேலும், ஆனைக்கட்டிக்கு 2 தனியார் பேருந்துகள் மற்றும் குறைந்த அளவிலான அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் நெரிசலில் பயணிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே கோவையில் இருந்து ஆனைக்கட்டிக்கு கூடுதலாக அரசுப்பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு கூடுதல் பயணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.