ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் அமோகம்!

 
textile market

வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே பிரசித்த பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு ஜவுளியை வாங்கி செல்வர். விசேஷ நாட்களில் ரூ. 4 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். 

இந்த நிலையில், ஜவுளி சந்தையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது. எனினும் தொடர் மழை மற்றும் வெளி மாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. அதேவேளையில் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது. 

textile market

இந்த நிலையில், நேற்று கூடிய ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை வர உள்ளதால் நேற்று ஜவுளி சந்தை களைக்கட்டியது. கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதேபோல், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும், அதிகளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம்போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாகவும் ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர். 

நேற்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கம்பளி, பெட்சீட், சிறுவர்களுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிகளவில் விற்பனையானது. நேற்றை சந்தையில் சில்லரை வியாபாரம் மட்டும் 45 சதவீதம் நடைபெற்றது. இதேபோல், மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்து வரும் நாட்களில் ஜவுளி சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.