தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்யும் கருப்பன் யானை... மயக்கஊசி செலுத்தி பிடிக்கும் பணி இன்று துவக்கம்!

 
elephant

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை மயக்கஊசி செலுத்தி பிடிக்கும் பணி இன்று காலை தொடங்க உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அக்கூர்ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை, வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் காவலுக்கு செல்பவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் திகினாரை, ரங்கசாமி கோவில், கரளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கருப்பன் யானையை பிடித்து, வேறு வனப்பகுதிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, வனத்துறையினர் கருப்பன் யானையை வேறு வனப்பகுதிக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கருப்பன் யானை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு கட்டி வருகிறது. தற்போது ரங்கசாமி கோவில் பகுதியில் நடமாடும் கருப்பன் யானையை கண்காணிக்க பொள்ளாச்சியிலிருந்து கபில்தேவ், முத்து ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக சலீம் என்ற கும்கி யானையும் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால் 3 கும்கி யானைகள் உதவியுடன், கருப்பன் யானையை மயக்குஊசி செலுத்தி, வேறு வனப்பகுதி கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். 

thalavadi

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது :- கருப்பன் யானையை மயக்கஊசி செலுத்தி பிடிக்க தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். வனக்குழுவினர் கருப்பன் யானை நடமாடும் பகுதிகளில் ஆய்வுசெய்து, கும்கி யானைகளை பயன்படுத்தி எந்த இடத்தில் கருப்பன் யானைக்கு மயக்கஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்துவது மற்றும் வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்வது குறித்து இடம் தேர்வுசெய்யும் பணி மேற்கொண்டனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜ்குமார் தலைமையில், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா, வனச்சரக அலுவலர்கள், வனகால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் என 150 பேர் குழு, 3 கும்கி யானைகளை பயன்படுத்தி கருப்பன் யானையை பிடிப்பதற்கான பணிகள் இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகிறார்கள். மயக்கஊசி செலுத்தி கருப்பனை வேறு வனப்பகுதி கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.