தந்தையின் மெழுகு சிலையின் முன்பாக திருமணம் செய்துகொண்ட மகன்!

 
slm

சேலத்தில் மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற, அவரது மெழுகு உருவ சிலையின் முன்பாக மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் - புஷ்பராணி தம்பதியினர். இவர்களுக்கு ஆரோக்கிய இயேசுராஜா என்ற மகனும், ராசிகா என்ற மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இறக்கும் முன்பாக தனது மகனுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடத்த அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கு, ஜுலியட் லதா என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை இரவு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

slm

இந்த நிகழ்ச்சியில், தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஆரோக்கிய இயேசு ராஜா பெங்களுருவில் உள்ள நிறுவனத்தில் ரூ.5 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட தந்தையின் மெழுகு சிலையை அமர வைத்து, சிலையின் முன்னிலையில் விழாவை நடத்தினார். மேலும், மணமக்களும், உறவினர்களும் பன்னீர்செல்வத்தின் மெழுகு சிலையின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்றிய ஆரோக்கிய இயேசுராஜாவின் செயல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.