நெல்லை அருகே உணவக உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
nellai

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். ராஜநாராயணன் குடும்பத்துடன் நெல்லையில் வசித்து வந்தார். மகளுக்கு திருமணமான நிலையில், சமீபத்தில் அவரது மகன் குருசங்கருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

nellai gh

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் ராஜநாராயணன் தனது சொந்த ஊரான கூந்தன்குளத்திற்கு சென்றுவிட்டு பின்னர் காரில் நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தார். மூலக்கரைப்பட்டி அருகே சென்றபோது ராஜாநாராயணனின் கார் திடீரென பழுதாகி உள்ளது. இது குறித்து அவர் தனது மகன் குருசங்கருக்கு தகவல் அளித்து, அங்கு வரும்படி கூறியுள்ளார். பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அன்று இரவு மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் ராஜநாராயணன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலக்கரைப்பட்டி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜநாராயணன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.