திருப்பூரில் இரவில் மலர்ந்த அரிதான பிரம்ம கமலம் பூ... ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கலம் பூக்கள் பூத்ததால், அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
திருப்பூர் போயம்பாளையம் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது வீட்டில் அரிய வகையிலான பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்தார். இந்த செடியில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூ பூக்கும் நிலையில், சில மணி நேரமே அந்த பூ மலர்ந்திருக்கும். வழக்கமாக ஜுலை மாதத்தில் பிரம்ம கமலம் பூக்கள் மலரும் நிலையில், கிருஷ்ணன் வீட்டில் வளர்த்து வரும் செடியில் நேற்றிரவு பிரம்ம கமலம் பூ பூத்தது.
அவரது வீட்டில் ஒரே செடி வளர்த்து வரும் நிலையில், அதில் 8 பூக்கள் மலர்ந்திருந்தன. வெண்ணிறத்திலான இதழ்களை கொண்ட அந்த பிரம்ம கமல பூக்களை கிருஷ்ணன் குடும்பத்தினரும், அந்த பகுதியை ஏராளமான பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும், சிலர் தங்களது செல்போன்களில் புகைப்படமும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.