அண்ணாமலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட நபர் கைது!

 
annamalai

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தயார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெளியாகிய வீடியோ காட்சியை வைத்து, கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை அறிந்த கோவை மாவட்ட பாஜகவினர், அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் அண்ணாமலை குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

arrest

 புகார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், போத்தனூர் போலீசார் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, அவதூறு வீடியோவை வெளியிட்ட ரமேஷை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.