ராஜபாளையம் அருகே கடன் பிரச்சினையில் டீக்கடை உரிமையாளர் படுகொலை!

 
murder

ராஜபாளையம் அருகே கடன் பிரச்சினையில் டீக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக்கொன்ற 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (55). இவரது மகன் ஆனந்தகுமார் (30). இவர்  தனது தந்தையுடன் சேர்ந்து, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.  சமீபத்தில் ஆனந்தகுமார் குடும்ப செலவிற்காக, தேவதானம் பகுதியை சேர்ந்த ரவுடி மருதுபாண்டி என்பவரிடம் ரூ.15 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதற்காக முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வட்டி கட்டவில்லை என தெரிகிறது. இதனால் மருதுபாண்டி, ஆனந்தகுமாரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

rajapalayam

இந்த நிலையில, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்தகுமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை, சேத்தூர் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, சேத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டது டீக்கடை உரிமையாளர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் ரவுடி மருதுபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் என  5 பேர் ஆனந்தகுமாரை கடத்திச்சென்று கத்தியால் குத்திக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  மருதுபாண்டி உள்ளிட்ட 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.