தாராபுரத்தில் ஷோரூம் முன்பு நின்ற பைக்கை திருடிச்சென்ற மர்மநபர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

தாராபுரத்தில் ஷோரூமின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் திருடிச்செல்லும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது தாயார் கண்ணம்மாள். இவரது தாயார் கண்ணம்மாள், தாராபுரத்தில் உள்ள ஷோரூமில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தை ஷோரூமின் வெளியே நிறுத்திவிட்டு, மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். மாலை 4 மணி அளவில் வாகனத்தை எடுப்பதற்காக அவர் வந்தபோது, அங்கிருந்த இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான கார்த்திகேயன், அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, கைலி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனின் வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கார்த்திகேயன், தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.