கடை முன் வைத்திருந்த வெங்காய மூட்டையை திருடிச்சென்ற மர்மநபர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
mdu

மதுரை கீழமாசி வீதியில் கடையின் முன் வைத்திருந்த வெள்ளைப்பூண்டு மூட்டையை மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரை கீழமாசி வீதியில் பலசரக்கு பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து, பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், இரவு நேரங்களில் கடை வாசலில் இறக்கி வைக்கப்படும் வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகள் திருட்டு போவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதுரை வெண்கல கடைக்காரர் பகுதியில் உள்ள கடை முன் வைக்கப்பட்டிருந்த வெள்ளை பூண்டு மூட்டைகளை மர்மநபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் திருடிச்சென்றார்.

mdu

இதனை கண்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள், அந்த நபரை விரட்டி சென்றனர். எனினும் அந்த நபர் பிடிபடாமல் தப்பிச்சென்றார். இது குறித்து கடை உரிமையாளர் விளக்குதூண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபர் புதுவிளாங்குடியை சேர்ந்த ஜார்ஜ்(42) என்பது தெரிய வந்தது.

மேலும், இவர் மதுரையில் பல்வேறு இடங்களில் வெங்காயம், வெள்ளை பூண்டு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை திருடி வந்தது தெரிய வந்தது. மேலும், இவர் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனிடையே, ஜார்ஜ் வெள்ளை பூண்டு மூட்டையை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.