விபத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகம் வாலிபருக்கு பொருத்தப்பட்டது!

 
organ donation

சேலத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகம், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது முதியவர் கடந்த 19ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர். இதனை அடுத்து, அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது சிறுநீரம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்றனர்.

doctors

தொடர்ந்து, சிறுநீரம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு 1 மணி நேரத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அம்மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 24 வயது நோயாளிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் நோயாளி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்,  சிறுநீரகத்தை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்து வர உதவிய சேலம்,  ஈரோடு மாவட்ட போக்குவரத்து போலீஸார் மற்றும் தமிழ்நாடு ஆர்கன் ஷேரிங் கட்டமைப்புக்கு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் சிறுநீரக மருத்துவமனை சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.