சாலையில் நடந்து சென்ற மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்... வேலூர் அருகே பயங்கரம்!

 
vlr

வேலூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை, கணவர் வழிமறித்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி புனிதா(36). இவர்களுக்கு நிவேதா(9) என்ற மகளும், நீதிஷ்(7) என்ற மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். ஜெய்சங்கருக்கு மது அருந்து பழக்கம் உள்ளது. மேலும், அவர் மனைவியின் நடத்தையில் சந்தேப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

murder

இந்த நிலையில், நேற்று புனிதா வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் பேருந்து மூலம் சொந்த ஊரான அழிஞ்சிகுப்பத்திற்கு வந்துள்ளார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரது கணவர் ஜெய்சங்கர், புனிதாவை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல முறை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள்,  புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

murder

தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, புனிதாவை, அவரது கணவர் ஜெய்சங்கர் கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.